சுவை தரும் கனி - 04.
நெல்லிக்காய்/பெருநெல்லி(Gooseberry).
நெல்லிக்காயின் வரலாறு தமிழ் இலக்கியத்தில் சங்க காலத்தில் இருந்தே பேசப்பட்டு வருகிறது. நெல்லிக்கனியை 2000 வருடத்திற்கு முன்பிருந்தே மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.நெல்லிக்காய் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஒரு சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வளரும் ஒரு கசப்பான ஆனால் ஊட்டச்சத்து மிகுந்த பழமாகும். சமஸ்கிருதத்தில் அமலாகி என்றும் அழைக்கப்படுகிறது. நெல்லிக்காய் துவர்ப்பு, புளிப்புச் சுவையுடன் இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.அருணகிரிநாதர் திருப்புகழில் விஷ்ணுவை கரு நெல்லி நிறத்துடன் ஒப்பிடுவது வியப்பான ஒரு உவமையாகும். ஒருவேளை நெல்லி போல விஷ்ணுவும் நமக்கு ஆரோக்கியம் அருள்வான் என்பதை அருணகிரி நாதர் நமக்குச் சொல்லாமல் சொல்ல நினைக்கிறாரோ!. என்று சொல்லக்கூடிய அளவு ஆரோக்கியத்தினை தருகின்றது நெல்லிக்கனி. “சிறியிலை நெல்லித் தீங்கனி” எனப் புறநானூறும் கூறுகின்றன. இதன் மூலம் நெல்லி என்பது தமிழர் உணவில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது அறியப்படுகிறது.
நெல்லிக்கனியின் மருத்துவக் குணங்களை இந்தியர்களிடமிருந்து கற்று வெளிநாட்டினருக்கு அறிமுகப்படுத்தியவர் ‘இந்தியவியல் படிப்பின் தந்தை’ என்று அறியப்படும் ஆல்பிருனி என்பவர் ஆவார். அவர், கி.பி.1017 முதல் 13 ஆண்டுகள் இந்தியாவில் தங்கி இந்திய அறிவியல் ரகசியங்களை ஆராய்ந்து “இந்தியாவின் சரித்திரம்” என்ற புத்தகம் எழுதியுள்ளர். அவர் தனது மருத்துவப் புத்தகத்தில் நெல்லிக்கனியின் மகிமையை இந்தியர்களிடமிருந்து கற்று எழுதியுள்ளார். இதன் மூலமாக அராபியர்களுக்கு இந்தக் கனி அறிமுகமாகி யுனானி மருத்துவத்திலும் இன்று நெல்லிக்காய்பயன்படுத்தப்படுகிறது.
நெல்லியில் 80% நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதனுடன் சேர்த்து, புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின், இரும்புச்சத்து, பொஸ்பரசு, கரோடின் பாலிபினால், வைட்டமின் B ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நெல்லியின் இலை, பட்டை, வேர், காய், பழம், காய்ந்த பழம், பூ, மற்றும்வேர்பட்டை, விதை அனைத்தும் பயன்தருவனவாகும். இந் நெல்லிக்கனியின் பயன்கள் பற்றி பார்ப்போம்.
நெல்லிக்கனியில் பெரும்பாலான பழங்களைப் போலவே நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடல் வழியாக உணவை நகர்த்த உதவுகிறது மற்றும் குடல் அசைவுகளை தூண்டுகிறது மற்றும் மலச்சிக்கலுக்கான வாய்ப்புகளை குறைக்கிறது. நெல்லி இரைப்பை மற்றும் செரிமான சாறுகளின் சுரப்பைத் தூண்டுகிறது, இதனால் உணவு திறமையாக ஜீரணிக்கப்படுகிறது. பற்கள், ஈறுகள் பலம் பெறுவதுடன், வாய் துர்நாற்றம், ரத்தச் சோகை உயர் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகளை போக்குகிறது.
நெல்லியில் உள்ள இரும்புச் சத்து புதிய சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குவதையும் ஊக்குவிக்கிறது. நீர் உள்ளடக்கம் மிக அதிகமாக இருக்கும் பழம் என்பதால் நெல்லி இயற்கையிலேயே சிறுநீர் போக்கைத் தூண்டுகிறது மற்றும் சிறுநீரின் அளவை அதிகரிக்கின்றது. நெல்லிமுள்ளி என்று அழைக்கப்படும் நெல்லிக்காய் வற்றல், குளிர்ச்சி தரும், இருமல், சளி போன்றவற்றைக் குறைக்கும், உடலைப் பலப்படுத்தும். நெல்லிக்கனி எச்.ஜ.வி வைரஸ் தொட்டை எதிர்க்கு சக்தி கொண்டதாகும்.
தினம்ஒரு நெல்லிக்கனி உண்பதால் பித்தம் குறைவடைகின்றது. இறத்தகொதிப்பை மழுமையாக குறைக்கக்கூடிய சக்தி நெல்லிக்கு உண்டு. இரத்தகுழாய்கள் மற்றும் இதய வால்வு ஆகியவற்றில் காணப்படும் அடைப்புக்களை நீக்கி இதயம் சீராக செயற்பட உதவுகிறது. நெல்லிக்கனி வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஞாபக சக்தி அதிகரித்துக் கண் பார்வை தெளிவாகவும் நெல்லிக்காயைப் பயன்படுத்தலாம்.
நெல்லிக்காயை நான்காக நறுக்கி உலர்த்தி பின்னர் பொடியாக்கி வைத்துக் கொண்டு அதோடு பயத்தம் பருப்பு மாவை கலந்து உடலில் தேய்த்து குளித்து வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும். நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.
முடிந்தவரை நெல்லிக்கனியை நாம் அன்றாடம் சாப்பிடும் பழவகைகளுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.
Comments
Post a Comment