சுவையூட்டி - 01.

மிளகு(Pepper).

மிளகின் பிறப்பிடம் தென்னிந்தியா வாகும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்து மிளகு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பண்டைய காலங்களில் மிளகு "கரங்கறி" என்று அழைக்கப்பட்டது. முதன் முதலில் தமிழர்களால் மிளகுகண்டுபிடிக்கப்பட்டது. மிளகின் உண்மையான பெயர் பிப்பாலி அதன் மறுவல் தான் கிரேக்கத்தில் பிப்பர் என்றாகி இன்று ஆங்கிலத்தில் பெப்பர் என்று அழைக்கப் பெறுகிறது. 

குறிப்பாக கேரளாவில் தான் மிளகு பயிரிடக்கூடிய காலநிலை கானப்படுகிறது. தற்போது மிளகு உற்பத்தியில் வியட்நாம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கடுத்து இந்தோனேசியா, இந்தியா, பிறோசில், சீனா ஆகிய நாடுகள் காணப்படுகின்றது. இலங்கையிலும் மிளகு பயிரிடப்பட்டு வருகிறது.

குறிப்பாக சேர, சோழ காலப்பகுதியில் முக்கியத்துவம் பெற்ற வணிகப் பொருட்களுள் மிளகு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. சேரகாலப்பகுதியில் சிறப்படைந்த முசிறி துறைமுகம் தான் மிளகின் நுழைவாயிலாகக் காணப்பட்டது. இங்கிருந்தே யவனர்கள் மிளகினை பொன் கைடுத்துப்  பெற்றுச் சென்றுள்ளனர். இதனை எட்டுத்தொகைபாடல் சான்றளிக்கின்றது.

"அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும்வாரேன் வாழி, என் நெஞ்சே சேரலர் சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க, யவனர் தந்த வினை மாண் நன் கலம் பொன்னொடு வந்து கறயொடு பெயரும் வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ"

                                                   அகம் 149

இக் காலத்தில் மிளகினை கிரேக்கம், ரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றது. இதனால் மிளகிற்கான கேள்வி அதிகமாக காணப்பட்டது. ஆகவே மிளகு அக்காலத்தில் இருந்து "கறுப்புத் தங்கம்"என்று அழைக்கப்பட்டது. இதனால் செல்வந்தர்கள் மட்டுமே மிளகை பயன்படுத்தக் கூடிய நிலை இருந்தது. பின்னர் அரேபியர், ஐரோப்பியர், சீனர்கள் ஆகியோர் மிளகினை ஏற்றுமதி செய்தனர்.

மிளகில் பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது  கருமிளகு, வெள்ளைமிளகு, பச்சை மிளகு, சிவப்பு மிளகு. பச்சை மிளகினை பழமாக்கி அவற்றை பழமாக நன்றாக காய வைப்பதால் கரு கரு என இருப்பது கரு மிளகு. பழமாக இருக்கும் மிளகின் தோல்களை கழுவி நீக்கி காயவைப்பதால் வெள்ளையாக இருப்பது வெள்ளை மிளகாகும். இதில் கருமிளகு தான் அதிகளவான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. சுமார் 14 - 15அடி உயரம் வரை வளரக்கூடியவை இம் மிளகு செடிகள். மிளகில் காணப்படும் piperine என்ற ஒரு பதார்த்ததினாலே மிளகில் காரத்தன்மை காணப்படுகின்றது. 

மிளகு வாசணைப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மிளகினை பொடி செய்தும் முழுதாகவும் பயன்படுத்த முடியும். கருமிளகில் பல்வேறு வேதிப் பொருட்கள் உள்ளது. கருப்பு மிளகில் மக்னீசியம், இரும்பு , விற்றமின் K மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன.

வாழைக்காய், ஈரப்பலா,பூசணிக்காய், மரவள்ளிக் கிழங்கு போன்ற கறிவகைககள் சமைக்கும் போது கட்டாயம் மிளகு சேர்த்தே சமைப்பதுண்டு. காரணம் இந்தக் கறி வகைகளில் உள்ள மாப்பொருள் வயிற்றில் வாயுத்தொல்லை தராமலிருப்பதற்காகவே இவ்வாறு மிளகு சேர்க்கப்படுகிறது.

மிளகை சளித்தொல்லை, ஆஸ்த்மா, பீனிசம், தலையிடி,விசக்கடி போனறவற்றிற்கும் பயன்படுத்துவதும் உண்டு. சிலருக்குப் பசுப்பால் அருந்தினால் வயிறு மந்தமாக இருப்பதாகக் கூறுவார்கள். அவர்கள் பாலைக் காயச்சும் போது சிறிது மிளகைப் போட்டுக் காய்ச்சி பாலருந்தினால் வயிற்று உப்புசம் ஏற்படாது.

உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு, தேமல் போன்றவற்றிற்கும் குப்பைமேனி, வேலிப்பருத்தி, அறுகம்புல், வேப்பிலை என்பவற்றில் ஏதாவது ஒரு இலையுடன் மிளகைச் சேர்த்து மைபோல அரைத்துப் பூசினால் சில நாட்களிலேயே அவை குணமாகிவிடும். மிளகு நரம்பியக்கடத்தல் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவுகிறது.

மிளகு சிறுநீர் சீராக வெளியேற உதவி புரிகிறது. இதனால் உடலில் உள்ள கூடுதல் நீர் மற்றும் நச்சுப் பொருட்களை அது வெளியேற்றுகிறது. இவைதான் உடல் எடையைக் குறைக்கும் நடவடிக்கைகளாகும். மிளகில் இரத்தத்தில்உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் பண்புகள் உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. கருப்பு மிளகை உணவில் சேர்ப்பது உயர் இரத்த சர்க்கரை அபாயத்தை குறைக்க உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

 அரைத் தேக்கரண்டி மிளகுத்தூளுடன் ஒரு தேக்கரண்டி தேன் அல்லது ஒரு தேக்கரண்டி வெல்லப்பொடி சேர்த்து ஒரு நாளைக்கு இரு தடவை உண்டுவர பீனிசம், தும்மல், இரைப்பு, மூச்சடைப்பு, சளி, தலைப்பாரம் என்பன குணமாகும். மரக்கறி உணவுகளை உண்போர் மிளகு ரசம் வைத்து உண்பதுண்டு.  

குழந்தைகளுக்கு ஏற்படும்  வாந்தி, வயிற்றுளைவு என அவதியுறும் போது ஒரு தேக்கரண்டி அளவு மிளகை வறுத்து ஒரு கப் நீர் விட்டு உப்பும் சேர்த்து அவித்து பருகக் கொடுத்தால் குணமாகும். மேலும் கருமிளகு மனச்சோர்வையும், களைப்பையும் போக்கக்கூடியது. மூளையின் அறிதல் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது. மிளகு உடல் செரிமானத்திற்கு உதவக்கூடிய பொருளாகும்.

இவ்வாறு பல்வேறுபட்ட நன்மைகளைக் கொண்ட மிளகினை அதிகளவு உண்பதால் வயிற்றெரிச்சல் ஏற்படும். நாம்உண்ணும் உணவில் மிளகினை குறிப்பிட்டளவில் உட்கொள்வது உடலுக்கு நன்மை தரும்.

Comments

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.