ஆரோக்கிய வாழ்க்கை.

ஆரோக்கிய வாழ்வுக்கு உட்கொள்ள வேண்டிய சிறுதானிய வகைகள்.

ஆதிகாலத்தில் தொடங்கி இன்று நாம் வாழும் நவீன காலம் வரை மனித இனம் பயன்படுத்தும் உணவு வகைகளில் சிறுதானியங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. தானியங்களில் சிறுவிதைகளைக் கொண்ட கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு போன்றவையே சிறுதானியங்கள். மிகக் குறுகிய காலத்தில், சாதாரண மண்ணில், வறட்சி நேரத்திலும் வளரக்கூடியவை. இவற்றில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளன. எளிதில் ஜீரணமாகக்கூடிய தன்மைகொண்டவை; மனிதர்களைப் பாதிக்கும் பல நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஆற்றல்கொண்டவை.

சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை கோலான் புற்றுநோய் வளரும் அபாயத்தைக் குறைக்கிறது. சிறுதானியங்கள் உடலில் உள்ள டிரைகிளிசரைடுகளின் அளவை குறைக்கிறது. சிறுதானியங்கள் இரத்தத் அணுக்கள் தடிமன் ஆவதைத் தடுத்து, இரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் வாதம், தமனி கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறைகிறது.

சிறுதானியங்கள் டிரிப்டோபான் எனப்படும் அமினோ அமிலத்தைக் கொண்டுள்ளது. இந்த அமினோ அமிலம் பசியின்மையைக் குறைத்து சரியான எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள வைட்டமின் ‘பி’ ஆனது கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பினைத் கிரகித்து அதனை ஆற்றலாக மாற்றுகிறது. வைட்டமின் ‘பி’ இரத்தத்தில் உள்ள ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்கிறது. இதயத்தமனிகளில் உள்ள‌ உட்சுவரினை தளர்த்துவதற்கு சிறுதானியங்களில் உள்ள‌ மெக்னீசியம் பயன்படுகிறது.

சிறுதானியங்கள் அதிகப் புரதச்சத்து மிகுந்த தானியமாகவும் மற்றும் அமினோ அமிலங்களில் ஒன்றான லைசினையும் கொண்டுள்ளது. இவை இரண்டும் தசைகள் சேதமடைவதை குறைத்து வலிமையான தசைகள் உருவாகுவதற்கு உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள டிரிப்டோபேன் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் செரோபோனின் அளவை அதிகப்படுத்துகிறது. சிறுதானியங்களால் செய்யப்படும் கஞ்சியினைக் தினமும் இரவு குடித்து வந்தால் அமைதியான தூக்கத்தினைப் பெற முடியும். தூக்கமின்மை பிரச்சனையால் அவதிபடுபவர்கள் இரவில் சிறுதானியங்களை சாப்பிடலாம்.

திணை

திணையில் அதிகளவு இனிப்பு பலகாரம் செய்யலாம். அதாவது சர்க்கரைப்பொங்கல், கருப்பட்டி, உளுந்தங்களி, பாயாசம், அதிரசம்,  மைசூர்பாக் மற்றும் லட்டு ஆகியவற்றை செய்யலாம். இருப்பினும் திணையை உட்கொள்ளும்போது உடல் சூடு அதிகரிக்கும். கண்ணுக்கு ஒளியை அதிகரிக்கும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. திணைமாவுடன் தேனை கலந்து சாப்பிடும் போது கபம் நீங்கும்.  விரைவில் செரிமானமாகும்.

தினை புரதச் சத்து அதிகம் நிறைந்த உணவாகும். தினை கொண்டு செய்ய பட்ட உணவு வகைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடலில் தசைகள் நன்கு வலுபெறும். தினை தானியத்தில் மன அழுத்ததை குறைக்க கூடிய வேதி பொருட்கள் அதிகம் உள்ளன. எனவே தினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது மன அழுத்த பிரச்சனைக்கு சிறந்த ஒரு நிவாரணமாகும்.

தினை மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, ஞாபகத்திறனை மேம்படுத்தும் சக்தியை அதிகம் கொண்டிருப்பதால், அதை சாப்பிட்டு வருபவர்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவதாக மேலை நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஜுரம், காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினை கஞ்சி, களி போன்றவற்றை கொடுத்து வருவது சிறந்த உணவாக இருக்கும்

சாமை

எல்லாவித சமையலுக்கும் உகந்த சிறுதானியமாக சாமை விளங்குகிறது. சாதம், இட்லி, தோசை மற்றும் கிச்சடி போன்ற உணவுகளை இவற்றில் செய்யலாம். நெல்லரிசியை காட்டிலும் 7 மடங்கு நார்சத்து கொண்டதால் மலச்சிக்கல் மற்றும் நீரிழிவு பிரச்சனைக்கு தீர்வாக  அமைகிறது. இரத்த சோகை உள்ளவர்களுக்கு சாமை சிறந்த தீர்வை தருகிறது. இதில் அதிகளவு மினரல்ஸ் உள்ளதினால் நம் உடலில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை மிகவும் எளிதாக அதிகரிக்கிறது.

புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புகள், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை அடங்கியுள்ளன.

சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. மலச்சிக்கலை போக்கவல்லது. காய்ச்சலினால் ஏற்படும் நாவறட்சியை போக்கும். வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். ஆண்களின் இனப்பெருக்க அணு உற்பத்திக்கும், ஆண்மைக் குறைவை நீக்கும். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வர முதன்மை பங்கு வகிக்கும்.சாமையில் உடலுக்கு நன்மை தரும் கொழுப்புகள் அடங்கியுள்ளதால் இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து, மாரடைப்பு வராமல் தடுக்கும்.

குதிரைவாலி

குதிரைவாலி சுவைமிகுந்தது. இவற்றில் இட்லி, இடியாப்பம் கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேகவைக்கும் உணவுகள்  மிகவும் மிருதுவாக இருக்கும். அல்சர் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். காய்ச்சல் நேரத்தில் கஞ்சி வைத்து குடித்தால் காய்ச்சலை குணப்படுத்தும். மேலும் வாய்வு பிரச்சனைகளை குணப்படுத்தும். குதிரைவாலி, உளுந்து சேர்த்து களியோ அல்லது கஞ்சியோ செய்து சாப்பிட, இடுப்பு வலி மற்றும் வயிற்று கடுப்பு பிரச்சனை சரியாகும்.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் குதிரைவாலி அரிசியில் செய்த உணவுகளை தினமும் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.

வளரும் குழந்தைகளுக்கு தேவைப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட், பொஸ்பரஸ், கால்சியம், நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, போன்றவை குதிரைவாலி அரிசியில் அதிகமாக காணப்படுகிறது. வளரும் குழந்தைகளுக்கு குதிரைவாலி அரிசியை தினசரி உணவாக சமைத்து சாப்பிட கொடுத்து வந்தால் நாள் முழக்க சுறுசுறுப்பாகவும், ஆற்றலுடனும் இருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

வரகு


அடிப்படை உணவாக வரகரிசி திகழ்கிறது. மேலும் உடலின் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் அனைத்து வகையான திண்பண்டங்களையும் செய்யலாம். அதுவும் பிரியாணி செய்வதற்கு ஏற்றது. பித்த உடம்புக்காரர்கள், சளித்தொல்லையுள்ளவர்கள், தோல் பிரச்சனை உள்ளவர்கள் வரகரிசியை மிகவும் குறைவாக சாப்பிட வேண்டும். தேள் கடிக்கு மருந்தாகவும் பயன்படுகிறது வரகு.

புரதச்சத்து, சர்க்கரை, கொழுப்பு, மினரல்ஸ், கொழுப்புச்சத்து, கால்சியம் பாஸ்பரஸ், இரும்புசத்து, தையமின், நையஸின் போன்ற சத்துக்கள் வரகில் மிகுதியாக உள்ளது. கோடைகாலங்களில் வரகரிசி கொண்டுசெய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தாகம் தணிவதோடு, சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுக்கும். வரகரிசியை சாப்பிடுவதன் மூலம் ஆண்மை குறைபாட்டை போக்க முடியும்.

வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும். வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.

கேழ்வரகு

கேழ்வரகில் கஞ்சி, கூழ், களி, தோசை, அடை, லட்டு, அல்வா மற்றும் பக்கோடா என பலவகையான பலகாரங்கள் செய்யலாம். கேழ்வரகில் அதிகளவு கால்சியம் இருப்பதினால் மூட்டுவலி பிரச்சனைக்கு தீர்வாகிறது. கேழ்வரகு கூழானது மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கை நிறுத்தும் தன்மை கொண்டது. கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக்  கொள்ளலாம். உடலைக் குளிர்ச்சியாக்கும்.

உங்கள் சருமத்தை பாதுகாப்பதில் மிகவும் அக்கறை செலுத்துபவர் எனில் கேழ்வரகு உதவும். மனப்பதட்டம், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற மன ரீதியான பிரச்னைகளை சந்திப்பவர்கள் கேழ்வரகு சாப்பிட்டால் தீர்வு கிடைக்கலாம்.

கேழ்வரகில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதேசமயம் உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் செய்கிறது. எனவே உடல் எடையை குறைப்பவர்களுக்கு கேழ்வரகு நல்ல உணவாக இருக்கும். கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

கம்பு(Millet)

மிகவும் ஆரோக்கியமான கிராமத்து உணவாக இன்று வரை கம்மங்கூழ், தோசை, குழிப்பணியாரம் போன்ற உணவு இடம் பெற்று வருகிறது. கம்பு உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய சிறுதானிய உணவுகள். அதே சமயம் சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் தோல் நோய் பிரச்சனை உள்ளவர்கள் கம்பை குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும்.கம்பில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

கம்பு சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.கம்பில் நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்டு இருப்பதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் வயிற்றில் புண்கள் உள்ளவர்களுக்கு தொடர்ந்து சில காலம் கம்பு சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் நீங்கிவிடும்.

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலங்களில் சில சமயங்களில் அதிக இரத்த போக்கும் அடி வயிற்று வலியும் வரும். இந்த நேரத்தில் இளஞ்சூடான கம்பு கூழ் குடித்து வந்தால் மேற்கண்ட பிரச்சினைகள் தீரும்.கம்பு இரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.கம்பு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை குறைக்கிறது.நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் அதிகமாக இருக்கிற அரிசி சத்தத்தை சாப்பிட முடியாது அவர்கள் கம்பை கூழ் களி மற்றும் தோசை செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும் மற்றும் உடல் ஆரோக்கிமாகும்.

 சோளம்

சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம். இவற்றில் சில தானியங்களுக்காகவும், வேறுசில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன.இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன.

இவ்வினங்கள், எல்லாக் கண்டங்களையும் சேர்ந்த வெப்பவலய, குறை வெப்பவலயப் பகுதிகளையும், தென்மேற்கு பசிபிக், ஆஸ்திரேலியா பகுதிகளையும் தாயகமாகக் கொண்டவை. இது சிறு தானியப் பயிராகும்.

இருவகையான சோளங்கள் உள்ளன.

01.வெண்சாமரச் சோளம்

02.சிவப்பு சோளம்

வெண்சாமரச் சோளம்

சோளத்தை முழுதாகவோ, உடைத்தோ வேகவைத்து அரிசிபோன்றும், அரைத்து மாவாகவும் உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சோளம் நொதித்தல் தொழிற்சாலை, எரிசாராயம், கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்துப் பொருளாகப்பயன்படுத்தப்படுகிறது.வெள்ளைச் சோளம் அரிசியைப் போன்ற தன்மையையும் அதைவிடப் பல சத்துகளையும் கொண்டது. சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு, நார்ச் சத்துகள் உள்ளன. சிறுதானியங்களில் குறைந்தளவே குளுக்கோஸ் இருப்பதால், அவை மனிதனை சர்க்கரைநோயிலிருந்து காப்பாற்றக்கூடியவை.

சிவப்பு சோளம்

இவ்வகைச் சோளம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவாகப் பயன்படுகிறது. பெரும்பாலும் தென் ஆப்பிரிக்காவில் விளைவிக்கப்படும் இந்தச் சோளம், தற்போது மழை குறைவாகப் பொழியும் அனைத்து நாடுகளிலும் விளைவிக்கப்படுகிறது. சோளம் அனைத்துப் பகுதிகளிலும் விளைவதற்கு ஏற்றப் பயிர். சிறு வெள்ளைச்சோளமே இந்தியாவின் இயற்கைச் சோளம். மக்காச்சோளத்தின் உற்பத்தியில் தற்போது இந்தியா உலகில் 5ஆவது இடத்தில் உள்ளது.

சோள உணவுகள் உடலுக்கு உறுதி அளிக்கவல்லவை. உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். இதில் கால்சியம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்  மற்றும் இரும்புச் சத்து ஆகியவை அதிகளவில் இருப்பதால் இவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. 

கால்சியம் குறைபாடு பலவீனமான எலும்புகள் மற்றும் எலும்பு தொடர்பான வியாதிகளுக்கு வழிவகுக்கிறது. சோளத்தை உட்கொள்வதன் மூலம், எலும்புகளை  பலப்படுத்த முடிகிறது.

சோளத்தில் அதிக அளவில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது, இது உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை சமாளிக்கிறது. மேலும், இரத்த சோகை அபாயத்தை குறைக்கிறது. இரத்த சோகை உள்ளவர்கள் தங்கள் உணவில் சோளத்தை உட்கொள்ள வேண்டும்.




Comments

  1. 😮 ivalavu visayam irukkaa!!!! ovvonnum paakka romba azhagaa irukku 😍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.