விருது - 01.
நோபல் பரிசு.
தொழில்நுட்ப ரீதியாக உச்சம் தொட்டுக் காணப்பட்ட இக்கால கட்டத்தில் வாழ்க்கைத்துறைகளாகிய அறிவியல், அரசியல், மருத்துவம், பொறியியல், கலை ஆகிய துறைகள் வளர்ச்சி பெற்றுக் காணப்படுகின்றன. சங்க காலம் தொட்டு இன்று வரை கவிகளை பாடிய புலவர் முதல் ஓவியங்களை தீட்டிய ஓவியர்கள் வரை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய அறிஞர்களை மன்னர்கள் பாராட்டி கௌரவித்து பல்வேறு பரிசில்களை வழங்கியுள்ளனர். உலகனைத்திற்கும் உதவக்கூடிய செயற்கருஞ் செயல்களை செய்த பெரியவர்களை கௌரவிக்கும் முகமாக வழங்கப்படும் பாராட்டுக்களிலும் பரிசுகளிலும் மிகச்சிறந்ததாகக் விளங்குவது "நோபல் பரிசாகும்".நோபல் பரிசு என்பது உலகின் மிக உயரிய அறிவியல், இலக்கியம், மற்றும் அமைதிக்கான பரிசாகும். நோபல் பரிசானது 1895 ஆம் ஆண்டு சுவீடிய வேதியலாளரான ஆல்ஃரேட் நோபல் என்பவரால் நிறுவப்பட்டது.
ஆல்ஃரேட் தனது வாழ் நாளில் ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாகவே இப் பரிசு வழங்க எண்ணினார். நோபல் பரிசின் வரலாறு பற்றி பார்ப்போமானால், 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆல்ஃரேட் நோபலின் தந்தையாகிய எமானுவல் நோபல் என்பவர் சுவீடனில் வெடிமருந்து உற்பத்தி செய்தார். இவரால் பாதுகாப்பு நிறைந்த சிறந்த வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பல விபத்துக்கள் ஏற்பட்டதுடன் பலர் அகால மரணமடைந்தனர். இதனால் இவரை பயங்கரமானவர் என்று ஊர் மக்கள் கருதி இவரை வெறுத்து ஒதுக்கினர். எமானுவால் தனது தன்னருமை தாய் நாட்டை விட்டு விலகி 1833 ஆம் ஆண்டு பிறந்த தனது மகனாகிய ஆல்ஃரேட் உடன் ரஷ்யா சென்றார். ஆல்ஃரேட் சிறு வயதில் இருந்தே இரசாயனம், பௌதீகம் ஆகிய துறைகளை பெரும் விருப்பத்துடன் கற்றார். இவர் தனது இளவயதில் படிப்பை முடித்து விட்டு மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்று எந்திரவியலை திறம்படக்கற்றார். பின்னர் தனது தாய் நாட்டிற்குத் திரும்பி தனது தந்தை நடாத்திய வெடிமருந்து தொழிற்சாலையில் தொழிலாற்றினார்.
தனது தந்தைக்கு ஏற்பட்ட இழிபெயரும் இழி நிலையும் எண்ணி அவரது மனம் பெரிதும் துன்பமடைந்தது. ஆகவே தான் எப்படியாவது பாதுகாப்பான வெடிமருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று அப் பணியில் ஈடுபட்டார். மலை மலையாக தோல்விகளைக் கண்டு அவர் துவண்டு விடவில்லை மீண்டும் மீண்டும் தனது தொழிற்சாலையில் பாதுகாப்பான வெடிமருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இறுதியில் "நைட்ரோகிளிசரின்" என்ற பதார்த்தத்தை "கீசல் ருர்" என்ற களி மண்ணுடன் கலந்து பாதுகாப்பான வெடிமருந்தை கண்டுபிடித்தார். இவரது பாதுகாப்பான வெடிமருந்து கண்டுபிடிப்பு மலைகளை ஊடறுத்து பெரு வீதிகளை அமைக்கவும், ஆழமான நெடுங்கிணறுகள், சரங்கங்கள் தோண்டுவதற்கும் பெரும் உதவியாக அமைந்தது. அதேபோல் அழிவுத்துறைக்கும் இவர் கண்டுபிடித்த வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் வர வர வெடிமருந்துக்கான கேள்விகள் அதிகரித்துள்ளன. இதனால் ஆல்ஃரேட்டிடம் செல்வம் மலை மலையாக குவிந்தது.அளவின்றி குவிந்த செல்வங்களின் ஒரு பகுதியினை உலக நன்மைக்காக வழங்க எண்ணினார். இவர் கண்டுபிடித்த "டைனமைட்" என்ற வெடிமருந்தினால் ஏற்பட்ட அழிவுகளை கண்டு அச்சம் கொண்டார். எனவே தனது செல்வங்களின் பெரும் பகுதியை ஆக்கத்துறைக்கே செலவிட எண்ணினார். இவர் இலக்கியம், நாடகம் ஆகிய துறைகளில் விருப்புடையவராவார். தனது செல்வத்தின் ஒரு பகுதியை ஆண்டுதோறும் உலக நன்மைக்காக பௌதீகம், இரசாயனம், மருத்துவம், இலக்கியம், சமாதானம் என ஐந்து துறைகளிலும் அருஞ்செயல் புரிந்தவர்களுக்கு பரிசில் வழங்குவது என தீர்மானித்தார். இதனால் வழங்கப்பட்டதே "நோபல் பரிசு" ஆகும். இப் பரிசு பெறத் தகுந்தவர்களை சுவீடன் தேசத்து கரோலின் மருந்துவக் கழகம் தேர்ந்தெடுக்கின்றது.
நோபல் பரிசானது 1901 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் பத்தாம் திகதி தெரிந்தெடுக்கப்பட்ட மேதாவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதிகளவிலான நோபல் பரிசு வென்றவர் "மேரிகியூர்"அம்மையாவார். 1903 ஆம் ஆண்டுஇயற்பியலுக்கான விருதினை அவரது கனவனுடன் இணைந்து பெற்றார். கியூரி குடும்பமே அதிகளவில் பரிசுகளை வென்றுள்ளனர். இதுவரையில் நோபல் பரிசினை மூன்று தமிழர்கள் பெற்றுள்ளனர்.சர். சி.வி. ராமன் இயற்பியல் (1930)சுப்பிரமணியன் சந்திரசேகர் இயற்பியல் (1983)வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வேதியியல் (2009)என பெற்றுக் கொண்டனர்.
நோபல் பரிசு வென்றவர்கள் ஒரு தங்கப் பதக்கம், ஒரு சான்றிதழ் மற்றும் 10 மில்லியன் ஸ்வீடிஷ் கரன்சி (சுமார் 8 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகியவற்றைப் பெறுகிறார்கள். நோபல் பரிசு என்பது உலகின் மிக உயரிய அறிவியல் மற்றும் கலாச்சார விருதுகளில் ஒன்றாகும்.
Comments
Post a Comment